ஜனவரி-26 நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி மக்கள் அதிகளவில் கூடும் ரயில் நிலையங்கள், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவைகளில் பயங்கரவாதிகளின் சதிச்செயல்களை முறியடிக்கும் விதமாக தீவிர பாதுகாப்புகள் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் மாநகர போலீசார் இணைந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டுகள் தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவினரும் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்கள், பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகின்றன. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக், உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோரது மேற்பார்வையில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர்கள் செபாஸ்டியன், ரவிச்சந்திரன், மாசிலாமணி ஆகியோர் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் நிலையத்திலும், ரயில்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் மோப்ப நாய் படையினருடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரயில்வே பாலங்கள், மேம்பாலங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவைகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகர் மற்றும் புறநகரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Comments are closed.