Rock Fort Times
Online News

திருச்சியை தலைமையிடமாக கொண்டு தனி போக்குவரத்து கோட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரையிலான வட்ட பேருந்து சேவையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(25-09-2024) துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன், மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், துணை மேலாளர்( வணிகம் )ஆர் .சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்,  கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்தபடியாக திருச்சி பெரிய நகரமாக இருக்கிறது. எனவே, திருச்சியை தலைமையிடமாக கொண்டு தனி போக்குவரத்து கோட்டம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.  உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்குவது குறித்து ஆதவ் அர்ஜீன் பேசிய கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து. முதிர்ச்சியற்ற கருத்து என அந்த கட்சியின் மாநில நிர்வாகிகளே தெரிவித்து விட்டனர். எனவே, இதுகுறித்து விரிவாக பேச விரும்பவில்லை.  பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை செயலாளரிடம் பேசி உள்ளேன். இது தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியாகும்.  வி.சி.க.சார்பில் நடைபெறும் மதுவிலக்கு மாநாடு நல்ல நோக்கத்திற்காக நடத்தப்படக்கூடிய மாநாடு. மக்கள் விழிப்புணர்வுக்காக நடத்தப்படுகிறது.  இதில் அரசியல் கலக்கக்கூடாது என விசிக தலைவரும் தெரிவித்துள்ளார். மதுவிலக்கு துறை அமைச்சரும் தெரிவித்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்