சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) வயது மூப்பு மற்றும் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவக் கண்காணிப்பில் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர், கடந்த 1ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்படி கடந்த 25 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நல்லகண்ணு உறவினர்களிடம் நலம் விசாரித்ததோடு, தீவிர சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை கேட்டுக் கொண்டார். இன்று (பிப்.25) நடிகர் ரஜினிகாந்த், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நல்லகண்ணு உறவினர்களை தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நல்லகண்ணு இன்று (பிப்.25) உயிரிழந்தார். நல்லகண்ணு உயிரிழப்பு குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த 1-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நல்லக்கண்ணுவின் உயிர் பிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Comments are closed.