தர்மபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தலைமை ஆசிரியை கலைவாணி மாணவ, மாணவிகளை அழைத்து கை- கால்களை அமுக்கி விட சொல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து, பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறித்த தகவலின் அடிப்படையில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயகுமார், வட்டாட்சியர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் சத்யபிரியா ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி, தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக புதிய தலைமை ஆசிரியர் நியமிக்கப்பட்டார். இதேபோல அரசு பள்ளிகளுக்கு வரும் ஒரு சில ஆசிரியர்கள் மது அருந்திவிட்டு வருவதும், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. அவர்கள் மீது டிரான்ஸ்பர், சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுகிறது. இவ்வாறு ஒழுங்கீனமாக செயல்படும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
Comments are closed.