திருமண புகைப்பட ஆல்பத்தை அனுப்பாத ஸ்டுடியோ உரிமையாளருக்கு ரூ.1.25 லட்சம் அபராதம்- மாணவி தொடர்ந்த வழக்கில் திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு…!
திருச்சியில் உள்ள கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்து வருபவர் மாணவி எஸ். சதாக்ஷி அக்னிஹோத்ரி (29). இவர், உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் கடந்த 20-04-2021 அன்று நடைபெற்ற திருமண நிகழ்வுக்காக புகைப்படங்கள், விடியோ எடுக்க, கான்பூர் சாரதா நகரைச் சேர்ந்த ஸ்டுடியோ உரிமையாளர் ரவிசிங்குக்கு திருச்சியிலிருந்து ரூ. 33,600 முன்பணம் செலுத்தியிருந்தார். ஆனால், ரவிசிங் திருமணம் முடிந்து ஓராண்டாகியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வழங்காமல் இழுத்தடித்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சதாக்ஷி அக்னிஹோத்ரி, திருமண வீடியோ மற்றும் புகைப்பட ஆல்பம் வழங்குவதுடன், மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 31-11-2022 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதலில் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்க வேண்டும் என ரவிசிங்குக்கு உத்தரவிட்டது. ஆனால், அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவை ஏற்காததால் புகைப்படம் மற்றும் விடியோவுடன் ரூ. 33,600 பணத்தை 2 மாதங்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையறிந்த ரவிசிங், மனுதாரருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவுக்கு திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் ஆர். காந்தி தலைமையிலான குழுவினர், மனுதாரருக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரவி சிங்குக்கு ரூ.1 லட்சம் அபராதமும், ரூ. 20 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவாக 5,000 ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையும் நிறைவேற்றாததால், மனுதாரர் சதாக்ஷி அக்னிஹோத்ரி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த குறைதீர் ஆணையம் நீதிமன்றத்தை அவமதித்ததாக ரவிசிங்கை கைது செய்யும்படி ஆணை பிறப்பித்தது. இதையடுத்து உத்தரபிரதேசத்தில் இருந்த ரவிசிங்கை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதைத்தொடர்ந்து ரவிசிங், வழக்கை சுமூகமாக முடிப்பதற்காக மனுதாரர் சதாக்ஷி அக்னிஹோத்ரிக்கு ரூ.1.25 லட்சத்தை வழங்கினார். இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Comments are closed.