டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு இன்று (பிப்., 05) தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர். இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக்தந்திரிக் ஜன சக்தி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இதுகுறித்து சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
டில்லி சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இங்குள்ள வாக்காளர்கள் இந்த ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டும். இத்தருணத்தில், முதல்முறையாக வாக்களிக்க இருக்கும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் வாழ்த்துகள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.