தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் : திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல் – இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ,அதிகாரிகள் பேச்சுவார்த்தை…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பல இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக, ஜேகே நகர் குடியிருப்பு பகுதியில் அதிக அளவு மழை நீர் தேங்கியுள்ளது. அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை கடித்து துன்புறுத்துகிறது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும். ஆகவே, எங்கள் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றக் கோரி இன்று (18-12-2024) ஜேகே நகர் பகுதி மக்கள் காஜாமலை மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அந்தப் பகுதியில் போக்குவரத்தை மாற்றம் செய்து வயர்லெஸ் ரோடு மற்றும் புதுக்கோட்டை ரோடு பகுதியில் வாகனங்களை திருப்பி விட்டனர். சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் வருவாய் துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒன்றரை மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments are closed.