சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலை அடுத்த காளைக்கண்மாய் அருகே இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீஸார் இன்று (17-08-2024) வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே காரில் வந்த திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சாநத்தத்தை சேர்ந்த ரவுடி அகிலனை சோதனையிட முற்பட்டனர். அப்போது சப்- இன்ஸ்பெக்டர் குகனை வாளால் வெட்டிவிட்டு ரவுடி அகிலன் தப்பிக்க முயன்றார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆடிவேல் துப்பாக்கியால் அகிலனின் வலது காலில் சுட்டு அவரைப் பிடித்தார். இதில், காயமடைந்த அகிலன் மற்றும் எஸ்.ஐ.குகனை சிவகங்கை அரசு மருத்துவமனையில் போலீஸார் சிகிச்சைக்காக சேர்த்தனர். ரவுடி வாளால் தாக்கியதில் காயமடைந்த எஸ்ஐ-யை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அகிலன் மீது, 5 கொலை வழக்குகள் உள்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.