திருச்சி மாநகராட்சியில் குடியரசு தின விழா ! உறையூர், இராமலிங்கநகர் பிரைமரி ஹெல்த் சென்டருக்கு விருது – டாக்டர் ஷர்மிலி மதுரம் பெற்றுக்கொண்டார்…!
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ( ஜன.26 ) நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பல துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு விருதும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக சிறந்த மருத்துவமனை மற்றும் மருத்துவக்குழுவுக்கான விருதை உறையூர், இராமலிங்கநகரில் செயல்படும் அரசு நகர்ப்புற நலவாழ்வு மையத்திற்கு மேயர் மு.அன்பழகன் வழங்கினார். இவ்விருதை அம்மருத்துவ மையத்தின் மருத்துவர் ஷர்மிலி மதுரம் பெற்றுக்கொண்டார்.
தேசிய விருதுக்கு தேர்வு
திருச்சி, புத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனை எதிரில் செயல்படும் புகழ்பெற்ற மதுரம் மருத்துவமனையின் மருமகள் தான் டாக்டர் ஷர்மிலி மதுரம். இவர் தற்போது இராமலிங்கநகர் அரசு நகர்ப்புற நலவாழ்வு மையத்தின் மருத்துவராக பணியாற்றி வருகிறார். பல பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக இம்மருத்துவமையம் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது. இந்திய அளவில் நகர்ப்புறங்களில் செயல்படும் நல்வாழ்வு மையங்களின் தரம், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சேவைகள், குழந்தைகள் மற்றும் பிரசவ சிகிச்சைகள், மருந்தக வசதிகள் உள்ளிட்ட 12 அளவுகோல்களின் அடிப்படையில் மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மூலம் தேசிய தர உறுதி தரநிலைகள் ( NQAS ) நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த நவம்பர் 25ம் தேதி உறையூர், இராமலிங்கநகர் அரசு நகர்ப்புற நலவாழ்வு மையத்தை மத்திய ஆய்வுக்குழு ஆய்வு செய்தது. அதில் 95.94 புள்ளிகள் பெற்று சிறந்த மருத்துவ மையமாக இராமலிங்கநகர் பிரைமரி ஹெல்த் சென்டர் தேர்வானது. திருச்சியில் செயல்படும் 18 அரசு நகர்ப்புற மையங்களில் ஏற்கெனவே சுப்பிரமணியபுரம் மற்றும் காந்திபுரம் அரசு நலவாழ்வு மையங்கள் மத்திய அரசின் NQAS விருதை பெற்றிருந்தாலும் இராமலிங்கநகர் பிரைமரி ஹெல்த் சென்டர் அதிக புள்ளிகள் பெற்று மத்திய அரசின் விருதுக்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.