Rock Fort Times
Online News

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 நிவாரணம்: முதல்வர்  மு.க. ஸ்டாலின் அறிவிப்பு…

மிக்ஜாம் புயல் மழையால் சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணமாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “கொசஸ்தலை ஆற்றில் எண்ணூர் முகத்துவார பகுதியில் கடந்த 5ம் தேதி ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்றிட தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிகழ்வில் காட்டுக்குப்பம், சிவன்படைகுப்பம், எண்ணூர் குப்பம் முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வ.உ.சி நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடிவலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது. மேலும் இக்கிராமங்களை சார்ந்த மீனவர்கள் எண்ணெய் கசிவினால் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல இயலாததால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அத்தொகையும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கூடுதலாக எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேற்கண்ட மீனவ கிராமங்களை சார்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.12,500 வீதமும் மேலும் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்திட படகு ஒன்றிற்கு தலா ரூ.10,000 வீதமும் மொத்தம் 3 கோடி ரூபாய் அரசினால் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் மொத்தம் 5 கோடியே 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே, மிக்ஜாம் புயல் கனமழையினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு 8 கோடியே 68 லட்சம் ரூபாய் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்