கோவில், கோவிலாக மந்திரிக்க அழைத்துச் சென்றதால் ஆத்திரம்: திருச்சியில் தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு வலை…!
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் தனமணி காலனி பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. சமையல் வேலை பார்க்கும் தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (42). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மகன் கிருஷ்ண சாமிக்கு ( 21) கடந்த 6 மாதங்களாக உடல்நிலை சரி இல்லை. மேலும், அவர் மனநலம் குன்றியும் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மகனை கோவில், பள்ளிவாசல் என்று பெற்றோர் அழைத்துச் சென்று மந்திரித்து வந்ததாக தெரிகிறது. இது, கிருஷ்ணசாமிக்கு பிடிக்கவில்லை. வழக்கம்போல இன்றும்(23-06-2024) அவரது பெற்றோர், கிருஷ்ணசாமியிடம் கோவில் ஒன்றுக்கு மந்திரிக்கப் போக வேண்டும் என அழைத்துள்ளனர். ஏற்கனவே, இது தொடர்பாக ஆத்திரத்தில் இருந்த கிருஷ்ணசாமி இன்றும் அழைத்ததால் பெற்றோர் மீது கோபமடைந்து தாய் ஜெயந்தியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே, கிருஷ்ணசாமி வீட்டில் இருந்த மண்வெட்டி கட்டையை எடுத்து தாய் ஜெயந்தி தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்தம் பீறிட்டு கீழே சரிந்த ஜெயந்தி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனை கண்டதும் கிருஷ்ணசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில், பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தாயை கொலை செய்து விட்டு தலைமறைவான கிருஷ்ணசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.