கங்கைகொண்ட சோழபுரத்திற்கு ஜூலை 27ம் தேதி பிரதமர் மோடி வருகை: திருச்சி விமான நிலைய பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை…!
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் அவர் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வரும் பிரதமர், அன்று இரவு திருச்சியில் ஓய்வெடுக்கிறார். மறுநாள் 27ம் தேதி காலை திருச்சி விமான நிலையத்திற்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் சென்று அங்கு நடைபெறும் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வந்து டெல்லி செல்கிறார். திருச்சி விமான நிலையத்திற்கு பிரதமர் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்தை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் அந்நியர்கள் யாரும் தங்கியிருக்கிறார்களா? என்று போலீசார் கணக்கெடுப்பு பணி நடத்தினர். இந்தநிலையில் விமான நிலையத்திற்கு அருகே உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் நவீன கருவி மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமாக ஏதேனும் பொருள்கள் உள்ளதா என்பது குறித்தும் அவர்கள் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக திருச்சி விமான நிலையத்திலிருந்து டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகை வரை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments are closed.