27, 28-ம் தேதிகளில் பிரதமர் மோடி தமிழகம் வருகை-பல்லடத்தில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரை…
பிரதமர் நரேந்திர மோடி வருகிற பிப்ரவரி 27, 28 ஆகிய தினங்களில் தமிழகத்தில் திருப்பூர், கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஆளும் பாஜக அரசு மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில் கடந்த மாதம் தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்தநிலையில் மீண்டும் அவர் தமிழ்நாடு வருகை தர உள்ளார். பிப்ரவரி 27-ம் தேதி டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்து பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் கோவை வழியாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு வருகை தர உள்ளார். தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கிய ’என் மண் என் மக்கள்’ நடைபயணம் வருகிற 27-ம் தேதி திருப்பூரில் நிறைவு பெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பகுதிக்கு வருகை தர உள்ளார். தொடர்ந்து அங்கு நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அன்று மாலை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக மதுரை செல்கிறார். மாலையில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இரவு திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார். பிப்ரவரி 28-ம் தேதி காலை மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வஉசி துறைமுக வளாகத்தில் பல்வேறு திட்ட பணிகளைத் தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் அமைக்கப்பட உள்ள ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவில் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொள்கிறார். பின்னர் டெல்லி புறப்பட்டு செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.