Rock Fort Times
Online News

கொளத்தூர் தொகுதி த.வெ.க வேட்பாளர் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த மனு தள்ளுபடி…! * சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..! 

நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இரண்டாவது இடம் பிடித்த மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையத்திடம் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்நிலையில், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி பேடுகளை மீண்டும் சரிபார்க்க உத்தரவிட வேண்டும். தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் வெற்றி செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் தரப்பு, தேர்தல் ஆணையம் மற்றும் வி.எஸ்.பாபு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இன்று(03-09-2026) காலை இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு, தேர்தல் முடிவை எதிர்த்து ரிட் மனுவாகத் தாக்கல் செய்ய முடியாது என்றும், அதற்கு சட்டப்படி “தேர்தல் மனு” (Election Petition) மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என தள்ளுபடி செய்தது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்