Rock Fort Times
Online News

திருச்சியில் திறக்கப்பட்டு 8 மாதமாகியும் பயன்பாட்டுக்கு வராத பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்: தீபாவளி நெருங்குவதால் திறக்க கோரிக்கை…!

திருச்சி மாநகரின் மைய பகுதியாக மலைக்கோட்டை பகுதி விளங்கி வருகிறது.  இங்குள்ள என்.எஸ்.பி.ரோடு,  கடை வீதி, சிங்காரத்தோப்பு, சூப்பர் பஜார் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பிரபலமான ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள், உணவகங்கள், சிறு கடைகள் என ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளன. இப்பகுதியில்  அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் திருச்சி மட்டுமன்றி அருகில் உள்ள தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.  தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் இந்த பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழியும்.  அவ்வாறு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக நிறுத்திவிட்டு கடைவீதிக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.  இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு, நகராட்சி நிர்வாகத்துறை சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் மேலரண் சாலை கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் அருகே ரூ.21 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகத்துடன் கூடிய பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.  அதன்படி, கடந்த  2019-ம் ஆண்டு ஜூலை மாதம் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 2023-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதனை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில்  23 கடைகள் மற்றும் உணவகமும் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த வளாகத்தில் ஒரே நேரத்தில் 150 கார்கள், 550 இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.  மேலும்,  முதல் தளம், இரண்டாவது தளம், மூன்றாவது தளத்தில் வாகனத்தை நிறுத்துபவர்கள் மற்றும் வாகனத்தை எடுத்து செல்பவர்களுக்கு வசதியாக லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.  கடந்த 2023-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் 8 மாதங்களைக் கடந்தும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.  யாருக்கு ஒப்பந்தம் கொடுப்பது என்பதில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் அக்டோபர் தீபாவளி பண்டிகை வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஜவுளி ரகங்களை தேர்வு செய்ய தொடங்கி விட்டனர். இதனால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம் அக்டோபர் 1ஆம் தேதி பிறந்து விட்டால் கூட்டம் இன்னும் எக்கச்சக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அவ்வாறு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக இந்த பன்னடுக்கு வாகன நிறுத்தும் இடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்