Rock Fort Times
Online News

ஶ்ரீரங்கம் திமுக வேட்பாளர் துரைராஜூவுக்கு ரூ.5 லட்சம் கொடுத்து வாழ்த்திய பழனியாண்டி எம்.எல்.ஏ..!

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக யார் போட்டியிடப்போகிறார் என்கிற ஏக எதிர்பார்ப்பு கட்சியினர் மட்டுமின்றி அனைவரிடமும் நிலவி வந்தது. காரணம், இத்தொகுதியின் திமுக வேட்பாளர் ரேசில் தற்போதைய எம்.எல்.ஏ பழனியாண்டி, சாந்தபுரம் ஆனந்த், மாத்தூர் எஸ்.கருப்பையா, அந்தநல்லூர் துரைராஜ் ஆகியோர் முட்டி மோதிக் கொண்டிருந்தனர். இந்த நான்கு பேருமே தங்களுக்கு நெருக்கமான மேலிட தலைவர்கள் மூலமாக தேர்தலில் சீட் பெற்றிட வலுவாக காய் நகர்த்தி வந்தனர். இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதி வேட்பாளராக யாரை அறிவிக்கப் போகிறார் என்கிற சஸ்பென்ஸ் வேட்பாளர் லிஸ்ட் வெளியாகும் இறுதி நேரம் வரை நீடித்தது.

இந்த போட்டியில் அந்தநல்லூர் எஸ்.துரைராஜூக்கு சீட் கிடைத்தது. அவரும் தற்போது முழு வேகத்தில் தொகுதிக்குள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தற்போதைய எம்.எல்.ஏ பழனியாண்டியும், வேட்பாளர் துரைராஜூவும் முத்தரையர் சமூகத்தை சார்ந்தவர்கள். பழனியாண்டிக்கு கட்சித்தலைமை ‘சீட்’ கொடுக்காமல் துரைராஜூவுக்கு வாய்ப்பளித்துள்ளது. ஆகவே, ஸ்ரீரங்கம் தொகுதி திமுகவில் உள்ளடி வேலைகள் “கன்பார்ம்” என ஆளுக்கு ஒரு பக்கம் கொளுத்தி போட்டு வந்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் திடீர் திருப்பமாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்போதைய திமுக வேட்பாளரான துரைராஜ், தனக்கு ஆதரவு திரட்டும் விதமாக சோமரசம்பேட்டையிலுள்ள பழனியாண்டி எம்.எல்.ஏ வீட்டிற்கு அதிகாலை நேரத்திலேயே சென்றுள்ளார். அவரை வரவேற்ற பழனியாண்டி, துரைராஜிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது “சாமிய வேண்டிக்கிட்டு தம்பிக்கு திருநீறு பூசி விடுங்கண்ணே… என சென்டிமெட்டாக பழனியாண்டியை “டச்” செய்துள்ளார் துரைராஜ். நான் இன்னும் குளிக்கலைய்யா எப்படி திருநீறு பூச ? என பழனியாண்டி சொல்ல, குளிச்சிட்டு வாங்கண்ணேன் நான் காத்திருக்கிறேன் என துரைராஜ் கூறியுள்ளார். அதன்பிறகு சிறிது நேரத்தில், எம்.எல்.ஏ பழனியாண்டி ஃப்ரெஷ் ஆகிவிட்டு சாமியை வேண்டி நெற்றித்திலகமிட்டு துரைராஜூவை வாழ்த்தியதுடன் தேர்தல் செலவுக்கு உதவியாக தனது சொந்த பணம் ரூ.5 லட்சத்தை ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளரிடம் கொடுத்திருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத துரைராஜ், திகைத்துப்போய் வீடு திரும்பியுள்ளார். வாக்குப்பதிவுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் திரும்பும் திசையெங்கும் தேர்தல் “தீ” பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில், எம்.எல்.ஏ பழனியாண்டி வீட்டில் நடைபெற்ற இச்சம்பவம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுகவினரின் மனதை குளிர்வித்துள்ளது. என்னதான் ஆளுக்கொரு பக்கம் தேர்தலில் சீட் கேட்டு எதிரெதிர் வேலை பார்த்தாலும், வேறுபாடுபார்க்காமல் உள்ளடி வேலைகளில் இறங்காமல் இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து “ஜிகிரி தோஸ்து”களாக மாறியுள்ளதால் ஶ்ரீரங்கம் கழகக் கண்மணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்