கரூர் மாவட்டம், மைலம்பட்டி கோட்டை கரியாப்பட்டியை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 20-ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும் கடந்த 22-ம் தேதி மூளை சாவு அடைந்தார். அவரது உறுப்புகளை தானமாக அளித்தால் மற்ற நோயாளிகள் உயிர் பிழைப்பார்கள் என்று அவரது உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். துக்கம் ஒருபுறம் தொண்டையை அடைத்தாலும் மற்றவர்கள் வாழட்டும் என்ற நல்லெண்ணத்தில் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க உறவினர்கள் முன் வந்தனர். அதன்பிறகு மருத்துவமனை முதல்வர் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் , மருத்துவ நிலைய அலுவலர் ராஜ்மோகன் ஆகியோா் வழிகாட்டுதலின்படி மூளைச் சாவு அடைந்தவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் அகற்றப்பட்டன. அவற்றில், இதே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு மருத்துவக் குழுவினர் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிறுநீரகம் பொருத்தப்பட்டது. இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட 19-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும்.
மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், இரு கண்களும் இரண்டு பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.