தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்தளூர் ஊராட்சி எலந்தைப்பட்டி கிராமத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்க 50 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.50 கோடியாகும். இந்த நிலையில் ஒலிம்பிக் அகாடமி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். விழாவில், திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், திட்ட இயக்குனர் கங்காதரணி, திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் மற்றும் அண்ணாதுரை, விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒலிம்பிக் அகாடமி 50 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. இதற்கான இடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த ஒலிம்பிக் அகாடமி கட்டுமான பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டுமான பணிகள் 18 மாதங்களில் நிறைவடையும். இங்கு அனைத்து விதமான விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படும் ஒலிம்பிக் அகாடமி நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படும். என்று கூறினார்.
Comments are closed.