Rock Fort Times
Online News

திருச்சி, நம்பர்-ஒன் டோல்கேட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்…!(வீடியோ இணைப்பு)

தமிழகத்தில் ஒரு காலத்தில் அரிதாக நடந்த சாலை விபத்துகள், தற்போது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள், கட்டிடங்கள் கட்டப்பட்டதே ஆகும். தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளில் ஒன்றான திருச்சி – சேலம் நெடுஞ்சாலையானது இரு வழிச்சாலைகளாக உள்ளது. இதில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு , கோவை, ஓசூர், பெங்களூர் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் பிரதான சாலையாக திருச்சி சமயபுரம் நம்பர்- ஒன் டோல்கேட் உள்ளது . இந்த சாலை வழியாக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும், இந்த நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் திருச்சி- சேலம் நெடுஞ்சாலை ஆனது பல்வேறு காரணங்களால் பாதுகாப்பற்ற சாலையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இந்த இருவழி சாலையின் இருபக்கமும் வணிக நிறுவனங்கள், தரக்கடை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக அளவில் வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்த சாலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை தாங்களாக முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என அந்தக் கடைகளின் உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலைதுறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. அதற்கு செவிசாய்க்காத வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மெத்தனமாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் இன்று(06-02-2025) காலை லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் தலைமையில், லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார், காவல் ஆய்வாளர்கள் கதிரேசன், பெரியசாமி, முத்தையன், மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் துரைராஜ், மின் பாதை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் சிட்டிபாபு ஆகியோர் மேற்பார்வையில் 200க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நம்பர்- ஒன் டோல்கேட் பகுதியில் சாலையோரத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். காலை வேளையில் ஆக்கிரமப்பு அகற்றும் பணி நடைபெற்றதால் திருச்சி- நாமக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அதனை சரி செய்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்