மதுரை மாவட்டம், சோழவந்தான் தென்கரை பாலம் அருகே பிரபல அசைவ ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் பிப்ரவரி 4ம் தேதி கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி சிக்கன் வாங்கி சிலர் சாப்பிட்டனர். சிலர் கிரில் சிக்கன் பார்சல் வாங்கி சென்றனர். சோழவந்தானை சேர்ந்த பிரசன்னா என்பவர் தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து அந்த ஓட்டலில் சிக்கன் வாங்கி சாப்பிட்டார். சிறிது நேரத்தில் 10 பேருக்கும் மயக்கம் ஏற்பட்டது.
மேலும் அந்த ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட 3 வயது பெண் குழந்தை உட்பட 12 பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதன்படி 22 பேருக்கும் திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து அறிந்ததும் சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் முத்துராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ், பூபன் சக்கரவர்த்தி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட பணியாளர்கள் சம்பந்தப்பட்ட தனியார் ஓட்டலில் அதிரடி ஆய்வு நடத்தினார்கள்.
சுகாதார குறைபாடு, பாலித்தீன் பொருள் பயன்பாட்டுக்காக அந்த ஓட்டலுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலக்கால் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சவரிராஜ் தலைமையில் 9 வகையான உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வுக்காக மதுரை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

Comments are closed.