இந்தியாவில் யாரிடமும் இல்லை அம்பானி, அதானியிடமே இல்லாத சொகுசு கார் ! – திருச்சி திமுக எம்.எல்.ஏ கதிரவன், தனது தந்தைக்கு பரிசளித்தார்
பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனலெட்சுமி சீனிவாசன் கல்விகுழுமத் தலைவர் சீனிவாசனுக்கு நேற்று ( அக்.7 ) பிறந்தநாள். இதையொட்டி இவரது மகனும் திருச்சி, மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான கதிரவன், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 4 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள Cadillac Escalade V ரக ஸ்போர்ட்ஸ் காரை தனது தந்தைக்கு பரிசளித்து அனைவரையும் புருவம் உயரச்செய்துள்ளார். அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, பிரேசில் போன்ற உலகின் பல நாட்டு அதிபர்களும், முக்கியமான வி.வி.ஐ.பிக்களும் விரும்பி பயன்படுத்தும் Cadillac வகை கார்கள் இந்தியாவில் யாரிடமும் இல்லை. 2024ல் அறிமுகமான இந்த மாடல் காரை முதன்முதலாக வாங்கியுள்ள தனலெட்சுமி சீனிவாசன் குழுமம், இந்தியாவில் ஓட்டுவதற்கு தகுந்த மாற்றங்களை செய்வதற்கு மட்டுமே 7மாதங்கள் மெனக்கெட்டு சுமார் 80 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து இந்த விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளதாம். கோடிகளை கொட்டி வாங்கும் அளவுக்கு அப்படி என்ன இதில் சிறப்பம்சங்கள் இக்காரில் இருக்கிறது? என்றால்… கேட்கக்கேட்க திகைப்பையும் ஆச்சர்யத்தையும் அளிக்கும் பல சொகுசு வசதிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
7 பேர் பயணம் செய்யக்கூடிய ஒரு ஃபுல் SUV ரக கார்தான் இந்த Cadillac Escalade. முன்பக்க இருக்கைகளின் ஹெட் ரெஸ்ட் உட்பட கார் முழுவதும் மொத்தம் 36 ஸ்பீக்கர்கள் வரிசை கட்டி இருக்கின்றன. கூடவே 38 இன்ச் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், ஹேண்ட் லெதர் ஃபினிசிங்கில் செய்யப்பட்ட சொகுசு இருக்கைகள், முன் சீட் ஹேண்ட் ரெஸ்ட் ஸ்பேஸ் அருகே மைனஸ் 5டிகிரி வரை குளிர்விக்கும் பிரத்தியேக ஃப்ரீசர் பாக்ஸ், வாய்ஸ் கண்ட்ரோல் , ரெக்லைனர் சீட்டிங் அம்சங்கள், கலர்ஃபுல் இன்டீரியர் ஃபினிசிங் என ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் இதில் இருக்கின்றன. ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி, அதானி போன்றவர்களிடம் கூட இல்லாத சொகுசு காரை பிறந்தநாள் பரிசாக தனது தந்தைக்கு கொடுத்து தற்போது ஹாட் டாப்பிக் ஆகியுள்ளார் திமுக எம்.எல்.ஏ கதிரவன். உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா பாஸ் !
Comments are closed.