சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14-ந்தேதி அதிகாலை கைது செய்தது. அவரை கைது செய்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.
அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை வரும் 12- ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
அமலாக்கத்துறை தனது கணவரை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பணமோசடி பிரிவில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக ஊழல் தடுப்பு பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.