Rock Fort Times
Online News

வாழ்நாள் முழுவதும் எளிமையாகவே வாழ்ந்து அரசு மருத்துவமனையில் உயர்நீத்த நல்லகண்ணு…!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று(25-02-2026) காலமானார். இவர் 1925-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் நான்கு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள் கொண்ட பெரிய குடும்பத்தில் மூன்றாவதாக பிறந்தவர் ஆவார். பெற்றோர்கள் ராமசாமி-கருப்பாயி. மாணவர் பருவத்தில் இருந்தே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட நல்லகண்ணு 1944-ல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். 2010 ம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க அவரே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடித் தடை உத்தரவு பெற்றார். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் கொள்ளை நடப்பதற்கு எதிராகத் தீவிரமாகப் போராடினார். சுமார் 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டு காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவராகவும் இருந்தார். அவரது 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அதைக் கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். தமிழக அரசு ‘அம்பேத்கர் விருது’ கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும், மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார். இவர் மீதான அன்பினாலும், அக்கறையினாலும் ஒரு பத்திரிகையாளர் அவருக்குக் கார் ஒன்றைப் பரிசாக அளித்தபோது அதனையும் கட்சிக்கே கொடுத்துவிட்டார். தனக்கென பெரிதாக எந்தத் தேவையும், நோக்கமும் இல்லாத சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதி. தமிழினத்தின் வளர்ச்சி பெரும்பங்களிப்பை அளித்தவர் ஆர்.நல்லகண்ணு. தன் வாழ்நாள் முழுவதும் எளிமையாகவே வாழ்ந்தார். உடல்நலம் குன்றிய போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை யிலேயே சிகிச்சை பெற்றார். அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அந்த சிகிச்சையே தனக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியவர். அவர் இறந்தாலும் அவரது புகழ் இந்த வையகம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்