கோவையில் கடத்தப்பட்ட மைனர் சிறுமி காஷ்மீரில் மீட்பு – காதல் வலை விரித்தவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
மைனர் பெண்ணை காதலிப்பதாக கூறி கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, காஷ்மீருக்கு கடத்திச் சென்ற இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை கரும்புக்கடை பகுதியில் துணிக்கடை நடத்தி வருபவரின் 17 வயது சிறுமி, கடந்த ஜூலை 13ம் தேதி திடீரென மாயமானார். அதே சமயத்தில், சாரமேடு பகுதியைச் சேர்ந்த 23 வயதான அயாஸ் என்ற வாலிபரும் மாயமாகி இருந்தார். இதனால் சிறுமியை அயாஸ் கடத்தி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் சிறுமியின் தந்தை கரும்புக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அயாஸின் செல்போன் எண்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அயாஸ், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீஸார், ஸ்ரீநகருக்கு விரைந்தனர்.அங்கு சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த அயாஸை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் மீது புதிய சட்டப்பிரிவுகளின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமி, தற்போது சிறுவர் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Comments are closed.