திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், திருச்சி கிழக்கு தொகுதியில் இனிகோ இருதயராஜும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இருவரும் இன்று(04-04-2026) தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெல் தொழிற்சங்க அலுவலகத்தில் இருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன், கரகாட்டம் மற்றும் தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக வந்து திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான அமுதாவிடம், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள், கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்டமன்ற தொகுதியில் தான் செய்த திட்ட பணிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறேன். இதுவரை ரூ.450 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை தொகுதிக்கு செய்து உள்ளேன். அதேபோல் அரியமங்கலம் பொதுமக்களின் நீண்ட கால பிரச்சனையாக இருக்கும் குப்பை
கிடங்கை மாற்றுவதற்கு உரிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த இடத்தில் தற்பொழுது பொழுதுபோக்கு பூங்கா அமைக்க நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் கேட்டு நிதி பெற்று நிறைவேற்றப்படும். வருகிற 2027ம் ஆண்டுக்குள் இந்த இடத்திலிருந்து குப்பைகள் அகற்றப்படும். பால்பண்ணை- துவாக்குடி சர்வீஸ் சாலை பணிக்காக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மூலம் அந்த பகுதியில் உள்ள நிலங்களை கையகப்படுத்தி அதற்குரிய பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். வேட்பு மனு தாக்கலின் போது திருச்சி எம்பி துரை வைகோ, மண்டலம் மூன்றின் தலைவர் மு.மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி திலீபன், ரமேஷ், தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
இனிகோ இருதயராஜ்:
இதேபோல திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் த.இனிகோ இருதயராஜ், திருச்சி மாநகராட்சி மண்டல அலுவலகம் 2-ல் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Comments are closed.