Rock Fort Times
Online News

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் மெத்தனால் சப்ளை செய்தவர் கைது – நள்ளிரவில் தட்டி தூக்கியது காவல்துறை…!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 55 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்றதாக கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இரண்டாம் தரகராக மெத்தனாலை சப்ளை செய்த சின்னத்துரை, ஜோசப் ராஜா, மதன்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விசாரணை செய்ததில் மாதேஷ் என்பவர்தான் தங்களுக்கு மெத்தனால் சப்ளை செய்பவர் என்ற தகவலை தெரிவித்தனர். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் மாதேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கச்சிராப்பாளையத்தில் ராமர் என்பவரும் கைது செய்யப்பட்டார். 55 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாக கள்ளச்சாராயத்துக்கு மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளி சிவக்குமார் என்பது தெரிய வந்துள்ளது. இவர் மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர். காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சிவக்குமாரை நள்ளிரவில் சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர், சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரது பின்னணியில் யார்- யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவரையும் சேர்த்து கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்