Rock Fort Times
Online News

வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமானவர்கள் நீக்கம்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்… மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்களை நீக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி எஸ்.ஐ.ஆர் க்குப் பின் நடந்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களான சுக்பிர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல், தன்னிச்சையாகவும், இரகசியமாகவும் செயல்பட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது. தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து 10 மாதங்களில் 14 முறை அவர்கள் ஆட்சேபணை தெரிவித்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளது இந்திய ஜனநாயகத்தின் மீதான மிக மோசமான தாக்குதல் என்றும், உச்ச அமைப்பின் நம்பகத்தன்மையையே முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளதாகவும் அவர் தனது ‘எக்ஸ்’ பதிவில் சுட்டிக் காட்டியுள்ளார். வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வலைத்தளம் (ERONet) முழுமையாக ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், வாக்காளர் பதிவு அலுவலர்களால் தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்க்க முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையர்களே தெரிவித்துள்ளதன் மூலம் தேர்தல் ஆணையத்தில் எந்த அளவுக்கு அரசியல் குறுக்கீடுகள் இருந்திருக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதத்தில் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்திருந்த நிலையில், அவர் இனியும் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்றும் உடனடியாக அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். என்றும், இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடந்த அத்துமீறல்கள் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் திமுக சார்பில் கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்