Rock Fort Times
Online News

தமிழக பால்வளத்துறை அமைச்சராக மனோ.தங்கராஜ் பதவி ஏற்பு…!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு இவர்கள் இருவரும் 2 -வது முறையாக அமைச்சர் பதவியை இழந்துள்ளனர். செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரிடம் இருந்த துறைகள் 3 அமைச்சர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கூடுதலாக மின் துறை வழங்கப்பட்டுள்ளது. வீட்டுவசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சரான ராஜ கண்ணப்பனிடம் இருந்து பால்வளத்துறை எடுக்கப்பட்டு, அதற்கு பதில் வனத்துறை வழங்கப்பட்டுள்ளது.இதேபோல, ஏற்கனவே பால் வளத்துறை அமைச்சராக இருந்து விடுவிக்கப்பட்ட பத்மநாதபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மனோ தங்கராஜூக்கு மீண்டும் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அமைச்சர் பொறுப்பில் இருக்கும் எஸ்.எஸ்.சிவசங்கர், எஸ்.முத்துசாமி, ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டாலும் அவர்கள் மீண்டும் பதவி ஏற்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், பால் வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மனோ தங்கராஜ், அமைச்சர் பதவியை ஏற்க வேண்டும். இதற்கான பதவி ஏற்பு விழா இன்று(28-04-2025) மாலை சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் நடைபெற்றது. அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் கவர்னர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார். இந்த நிகழ்வில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்