விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று (03-09-2024) சாலை மறியலை தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பி-யின் தலை முடியைப் பிடித்து இழுத்து சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து எஸ்பி-யான கண்ணன் நேரடி விசாரணை நடத்தினார். கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த மினி லாரி ஓட்டுநர் காளிகுமார் (33). இவர், நேற்று தனது மினி லாரியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாய் பதிப்பதற்கான உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே சென்றபோது, 2 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் மினி லாரியை நிறுத்தி காளிகுமாரை தாக்கி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதையடுத்து காளிகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக காளீஸ்வரன், அருண்குமார், லட்சுமணன், பாலமுருகன், வீரசூரன், வேல்முருகன் ஆகிய 6 பேர் மீது திருச்சுழி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் காளிகுமாரின் உடல் செவ்வாய்க்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்படவிருந்த நிலையில், அவரது உறவினர்கள் ஏராளமானோர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று காலை குவிந்தனர். கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி அவர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த சிலர் டிஎஸ்பி காயத்ரியை தள்ளிவிட்டு அவரது தலை முடியை பிடித்து இழுத்து தாக்கினர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த எஸ்.பி.கண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து நேரடி விசாரணை நடத்தினார். இந்நிலையில் டிஎஸ்பி-ஐ தாக்கியது தொடர்பாக குமார், பொன்குமார் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர் .
பின்னர் , பாலமுருகன் (43) என்பவரை கைது செய்தனர். மேலும், மினி லாரி ஓட்டுநர் காளிகுமார் கொலை வழக்கில் காளீஸ்வரன், அருண்குமார், லட்சுமணன், பாலமுருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலை மறைவாக உள்ள வீரசூரன், வேல்முருகன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed.