மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் விடுவிப்பு…* சிபிஐக்கு நீதிமன்றம் கண்டனம்!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக 2022ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மதுபான கொள்கையில் லாபி செய்து ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியாவையும் சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று( பிப்.27) தீர்ப்பளித்த டெல்லி ரோஸ் அவென்யூ, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர சிங், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பில் எந்த ஆதாரமும் இல்லை. ஆம் ஆத்மி வகுத்த புதிய மதுபான கொள்கையில் சதி திட்டமோ, குற்றவியல் நோக்கமோ இல்லை. ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது. எந்த குற்றமும் செய்யாமல் முதல்வராக இருந்த கெஜ்ரிவால் 156 நாட்களும், துணை முதல்வராக இருந்த சிசோடியா 530 நாட்களும் சிறையில் இருந்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார். எனவே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, தெலுங்கானா பிஆர்எஸ் முன்னாள் தலைவர் கே. கவிதா மற்றும் விஜய் நாயர், அபிஷேக் போயின்பள்ளி உள்ளிட்ட மொத்தம் 23 பேரையும் விடுவிக்க உத்தரவிட்டார். மேலும், வழக்கில் சாட்சியமோ, ஆதாரங்களோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. நீதிமன்றம் அனைவரையும் விடுவித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Comments are closed.