Rock Fort Times
Online News

டிசம்பர் மாதத்தில் மறைந்த தலைவர்கள்…!

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று(14-12-2024) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1948ம் ஆண்டு டிசம்பர் 21ல் ஈரோட்டில் இளங்கோவன் பிறந்தார். சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம் பட்டம் பெற்ற இவர் தந்தை சம்பத் மறைவுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தாயார் சுலோசனா சம்பத், அதிமுக அமைப்பு செயலாளராக இருந்தார். 1984ல் நடந்த சட்டசபை தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவன், வெற்றி பெற்று முதன்முறையாக எம்எல்ஏ.,வானார். பின்னர் நடிகர் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியில் சேர்ந்து 1989ல் நடந்த தேர்தலில் ஈரோடு பவானி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். சிவாஜி, தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை வி.பி.சிங்கின் ஜனதா தளம் கட்சியோடு இணைத்தபோது, இளங்கோவன் மீண்டும் தாய் கட்சியான காங்கிரசில் ஐக்கியமானார். 1996ல் நடந்த லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1996 முதல் 2001 வரை தமிழக காங்கிரசின் மாநில தலைவராக பதவி வகித்தார்.

2004 லோக்சபா தேர்தலில் அன்றைய கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 2,14,477 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.பி.,யாகி மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சரானார். 2009 லோக்சபா தேர்தலில் ஈரோடு தொகுதியிலும், 2014 லோக்சபா தேர்தலில் திருப்பூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோற்றார். 2014 முதல் 2017 வரை மீண்டும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக 2வது முறையாக பொறுப்பேற்றார். 2019 லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திடம் தோல்வியை சந்தித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த தனது மகன் திருமகன் 2023ல் திடீரென மரணமடைந்ததால், அதே தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதே டிசம்பர் மாதத்தில் ஏற்கனவே, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ( 5-12- 2016), தந்தை பெரியார் (24-12-1973), முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் (24 -12- 1987), ராஜகோபாலாச்சாரி (25-12-1972), தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் (28-12- 2023) ஆகியோர் இயற்கை எய்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்