தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற மார்ச் 30ம் தேதி தொடங்க உள்ளது. அதனைதொடர்ந்து, ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மூலம், தகுதியான நபர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழந்துவிடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் கடைசி வாய்ப்பை வழங்கியது. அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வேட்புமனுதாக்கலுக்கான அவகாசம் முடிவதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை, தகுதியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணபிக்கலாம். நேரடியாக சம்மந்தப்பட்ட அலுவலகங்களிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ தேவையான ஆவணங்களை கொண்டு, வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான அவகாசம் இன்றுடன் அதாவது மார்ச் 26ம் தேதியுடன் முடிவடைகிறது. இன்று மாலைக்குகள் விண்ணப்பிப்பவர்களின் மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, அப்படி தேர்வானவர்களுக்கு என துணை வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும். அவர்கள் இந்த தேர்தலிலேயே அதாவது
வருகிற ஏப்ரல் 23ம் தேதியே வாக்களிக்கலாம். மார்ச் 26ம் தேதிக்கு பிறகு விண்ணப்பிப்பவர்களின் மனுக்கள் தேர்தல் முடிந்த பிறகே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே அவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது. இதனை கருத்தில் கொண்டு தகுதியான நபர்கள் வாக்குரிமையை உறுதி செய்துகொள்ள, தேர்தல் ஆணையத்தின் கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.