திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட கே.கே நகர் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கென அன்பில் தர்மலிங்கம் சாலை, நடராஜன் சாலை ஆகியவை இணையும் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக கிழக்கு கே.கே.நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் இந்த விளையாட்டு மைதானம் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் தவறான செயல்பாட்டால், இந்த விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சீரழித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு பாதாள சாக்கடை திட்டத்திற்காக கே.கே.நகர் பகுதியில் தோண்டப்பட்ட பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.
பாதாள சாக்கடை திட்டம் நிறைவுபெற்றும், இன்னும் இந்த சாலைகள் சீர் செய்யப்படவில்லை. இந்தநிலையில், புதிய சாலை அமைப்பதற்காக, சாலை ஓரங்களில் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு வரும் நிலையில், கே.கே நகர் விளையாட்டு மைதானத்தையும் ஆக்கிரமித்து ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விளையாட்டு மைதானத்தில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்கள், வயதானவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், இந்த விளையாட்டு மைதானத்தில் தினமும் காலை, மாலை நேரங்களில் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேட்மிட்டன், ஷட்டில் காக், வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்காகவும், பல்வேறு போட்டிகளை நடத்தவும் இந்த விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், மைதானத்தில் உள்ள கம்பங்கள் உடைக்கப்பட்டும்,
உள் விளையாட்டு அரங்கில் வைக்கப்பட்டிருந்த விளையாட்டு பொருட்கள், உடற்பயிற்சி சாதனங்கள் களவு போய் வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் புதிய வார்டு அலுவலகம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. இதை அறிந்த குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த கட்டிடம் மாற்று இடத்தில் கட்டப்பட்டது. தற்போது பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள இந்த விளையாட்டு மைதானம் மாநகராட்சியின் குப்பை கூழங்களை கொட்டி வைக்கும் குப்பை கூடமாகவும், குவியல், குவியலாக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
இதனை சாலை காண்ட்ராக்டர்கள் பயன்படுத்தக் கூடாது என குடியிருப்பு வாசிகள், விளையாட்டு மைதானத்தின் கேட்டிற்கு பூட்டு போட்டுள்ளனர்.
ஆனால், பூட்டை உடைத்து தற்போது இந்த விளையாட்டு மைதானம் மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சீரழிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், கே.கே.நகர் பகுதி திமுக கவுன்சிலர் மலர்விழி ராஜேந்திரன், ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் முறையிட்டும், இதனை கண்டு கொள்ளாமல் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விளையாட்டு மைதானத்தை மக்கள் பயன்படுத்த விடாமல் செய்தால், புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு வழிவகுக்கும் என்பதற்காக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் இதுபோன்று செய்கிறார்களா? என கேள்வி எழுந்துள்ளது. எனவே, மக்களின் நலன்கருதி இந்த விளையாட்டு மைதானத்தை சமன் செய்து மீண்டும் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், விளையாட்டு மைதானத்திற்குள் உள்ள உள் விளையாட்டு அரங்கில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.