கரூரில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சென்னையில் இருந்து இரவோடு இரவாக கரூர் வந்து அரசு மருத்தவமனையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மிகுந்த துயரத்துடன் கனத்த இதயத்துடன் பேசுகிறேன்.நேற்று இரவு 7.45 மணி அளவில் அதிகாரிகளுடன் பேசிக்கொடிண்ருந்தபோது கரூரில் அரசியல் பிரசாரத்தில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தது. உடனடியாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அனுப்பினேன். அடுத்ததாக கலெக்டரை தொடர்புகொண்டு அவரை அனுப்பி வைத்தேன். அடுத்தடுத்து மரணச்செய்தி அதிகமானதால் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் மற்றும் டி.ஜி.பி.,யை அனுப்பி வைத்தேன். அடுத்தடுத்த வந்த துயரச்செய்திகள் எனது மனதை கலங்கடித்தது. மூத்த அமைச்சர் எ.வ.,வேலுவுடன் தலைமை செயலகத்தி்ல் ஆலோசனை நடத்தினேன். குழந்தைகள் 10 பேர், பெண்கள் 16 பேர், ஆண்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டதி்ல் இத்தனை பேர் இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இனிமேல் இதுபோன்று நடக்கக்கூடாது. இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நான் என்ன ஆறுதல் சொல்வேன். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும். தொலைக்காட்சியில் இந்த கொடூரமான காட்சிகளை கண்டபோது என்னால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. உடனே கிளம்பி வந்துவிட்டேன். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். அவரது அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Comments are closed.