கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர பகுதியில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போயின. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் சங்கராபுரம் காவல் நிலைய போலீசார் இருசக்கர வாகன திருடனை பிடிக்க வலை விரித்தனர். இதன் ஒரு பகுதியாக சங்கராபுரம் – திருக்கோவிலூர் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கணியாமூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் உரிய பதில் அளிக்காமல் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் ராஜேஷ் கனியாமூர் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருவதாகவும், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக்கொண்டார். மேலும், பாசார் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் சிவன் கழுத்தில் இருந்த ஒன்றரைப் பவுன் தாலியை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகரான ராஜேசை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். கோவில் அர்ச்சகரே இவ்வாறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது போலீசாரை அதிரடித்தது.

Comments are closed.