ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக பொங்கல் கரும்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு- திருச்சியில் விவசாயிகள் போராட்டம்…!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளன. அதில், முழு கரும்பும் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொங்கல் சிறப்பு தொகுப்பில் வழங்கப்படும் செங்கரும்பு நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய அரசு அறிவித்திருந்தது. திருச்சியில் 70 சதவீதம் செங்கரும்பு விளைவிக்கப்படும் திருவளர்ச்சோலை பகுதியில், மொத்தமாக கரும்பு கொள்முதல் செய்யப்பட இருந்த நிலையில் அதற்காக விவசாயிகளுக்கு இன்று(07-01-2025) சீட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் திருவளர்ச்சோலை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் பொறுப்பாளரான அகிலன் ஆகியோர் முன்கூட்டியே நேற்றிரவு ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கி, அவர்கள் கரும்பு வெட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், இதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பதாக கூறியும், முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கரும்பு விவசாயிகள் திருவளர்ச்சோலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திருவளர்ச்சோலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
Comments are closed.