திருச்சி, பஞ்சப்பூரில் ரூ 408 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்- * முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வளர்ந்து வரும் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேருவின் பெரும் முயற்சியால் திருச்சி, பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனை அடுத்து கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகை புரிந்து பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து 115.68 ஏக்கர் பரப்பளவில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருச்சிக்கு வந்த முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேற்று (மே 8) துவாக்குடியில் அமைக்கப்பட்ட அரசு மாதிரி பள்ளியை திறந்து வைத்தார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் இரவு திருச்சி சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்தார். இன்று ( மே 9) காலை விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டு திருச்சி மன்னார்புரம் நான்குரோடு சந்திப்பு, கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர் வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை சென்றடைந்தார். அங்கு, நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்துக்கு அருகே, அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை திறந்து வைத்தார். மேலும், ரூ.236 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், ரூ.128.94 கோடியில் கட்டப்பட்டுள்ள அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்து, பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலையை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து, ரூ.408.36 கோடி மதிப்பிலான கலைஞர் மு. கருணாநிதி பேருந்து முனையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். பிறகு முனையத்தின் முதல் தளத்தில் நகரப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Comments are closed.