திருச்சி, திருவெறும்பூரில் ரயில் பெட்டியில் புகை வந்ததால் பரபரப்பு: பயணிகள் அலறியடித்து ஓட்டம்…! (வீடியோ இணைப்பு)
திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து காலை 8.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.05 மணிக்கு காரைக்கால் சென்றடையும். மறுமார்க்கமாக மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 6-45 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடையும். வழக்கம்போல இன்று(07-09-2024) காலை திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு காலை 8.25 மணிக்கு புறப்பட்ட பயணிகள் டெமோ ரயில் முன்பக்கம் இஞ்சினோடு பின்பக்கம் மற்றொரு இன்ஜினையும் சேர்த்து மொத்தம் 8 பெட்டிகளுடன் சென்றது. அந்த ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையம் இரண்டாவது நடைமேடைக்கு வந்து சேர்ந்தது. அப்போது பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த ரயில் இன்ஜினின் காட் பெட் பெட்டியில், இருந்து குபு குபுவென புகை வந்தது. இதனை கவனித்த ரயில்வே ஊழியர்கள் பயணிகள் அனைவரையும் கீழே இறங்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் பயணிகள் அனைவரும் அவசர, அவசரமாக கீழே இறங்கி ஓடினர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், திருவெறும்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் ரயில் பெட்டியில் ஏற்பட்ட புகையை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் வேளாங்கண்ணிக்கு செல்லும் மற்றொரு சிறப்பு ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். ரயில் பெட்டியில் புகை வந்த சம்பவத்தால் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.