Rock Fort Times
Online News

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும்… * முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் வலியுறுத்தல்..!

திருச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வட மாவட்டங்களில் அக்டோபர் 25ம் தேதியும், தென் மாவட்டங்களில் நவம்பர் 1ம் தேதியும் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். முடிவெடுத்துள்ள தாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கோரிய நிலையில் 58 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் எத்தனை பேர் ஊர்வலத்தை எதிர்த்துள்ளனர் என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள், இந்து பெருங்குடி மக்களிடம் பாசமாகவும், நேசமாகவும், அன்பையும், நட்பையும் கடைப்பிடித்து வாழ்ந்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு செய்கின்ற பலகாரங்களை இஸ்லாமிய மக்களுக்கு வழங்கி அந்த பலகாரங்களை இஸ்லாமிய மக்கள் சாப்பிடுவதும் அதுபோலவே ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின் போது முஸ்லிம்கள் வீட்டில் சமைக்கின்ற பிரியாணியை இந்து பெருங்குடி மக்களுக்கு வழங்கி அந்த பிரியாணியை இந்து மக்கள் அன்போடு சாப்பிடக்கூடிய நிகழ்வுகள் காலம் காலமாக நடந்து வருகிறது.

அதுபோலவே பிள்ளையார் ஊர்வலம் நடைபெறும் போதும், பல ஆயிரம் பேர் கூடும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீரங்கம் கோயில் போன்ற விழாக்களிலும் மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெறுகின்ற இந்து மத கோயில் விழாக்களிலும் முஸ்லிம்கள் எந்த எதிர்ப்பையும் எப்போதும் தெரிவித்ததில்லை. இந்திய நாட்டிலேயே தமிழ்நாடு என்றும் மத நல்லிணக்கமிக்க மாநிலமாக தொடர்ந்து இருந்து வருகிறது. ஆகவே, ஆர்.எஸ்.எஸ். நடத்துகின்ற ஊர்வலத்திற்கு அனைத்து இடங்களிலும் அனுமதி வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் காவல்துறையை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்