Rock Fort Times
Online News

புதுக்கோட்டையில் “லாக்” செய்யப்பட்ட காருக்குள் 5 பேர் சடலமாக கிடந்ததால் பரபரப்பு…! ( படங்கள் )

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நமுணசமுத்திரம் பகுதியில் இன்று (25-09-2024) சாலையோரம் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. காரின் ஜன்னல் மற்றும் கதவுகள் மூடப்பட்டிருந்ததால்  காரை நிறுத்திவிட்டு எங்கேயாவது சென்று இருப்பார்கள்  என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கருதினர். ஆனால், கார் வெகுநேரம் அதே இடத்தில் நின்றதால் சந்தேகம் அடைந்த அவர்கள் நமணசமுத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.  அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து காரின் கதவை உடைத்து பார்த்தபோது 3 பெண்கள் உட்பட 5 பேர் காருக்குள் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

பின்னர் 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் இது தொடர்பாக நடத்தப்பட்ட  முதல்கட்ட விசாரணையில், காருக்குள் இறந்து கிடந்தது சேலம் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் (50), அவரது மனைவி நித்யா (48), தாயார் சரோஜா (70), மகள் நிகரிகா (22), மகன் தீரன் (20) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் கடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  ஆனால், எதற்காக சேலத்தில் இருந்து புதுக்கோட்டை வந்தார்கள் என்பது தெரியவில்லை.  இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காருக்குள் சடலமாக கிடந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்