Rock Fort Times
Online News

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைக்கிறவர்களுக்கு நான் என்றைக்குமே ‘டேஞ்சர்’ தான்…* முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் நாளை மறுநாள் (23.04.2026) சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், இன்று( ஏப்.21) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தசூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:- இந்த சமயத்தில் எனக்கு ஒரு விஷயம் மனதில் வருகிறது. 2021ல் இதே மாதிரி சட்டமன்ற தேர்தல். அந்த சமயத்தில் சில பேர் ‘ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தன் கலைஞர்’ என்று சொன்னார்கள். கலைஞரோடு என்னை எப்போதுமே ஒப்பிட முடியாது. அவரை நான் அப்பாவென்று கூப்பிட்டதை விட, தலைவரென்று கூப்பிட்டதுதான் அதிகம். அப்படிப்பட்ட தலைவரை விட நான் மோர் டேஞ்சரஸ்னு அவர்கள் சொல்லும்போது எனக்கு ஒன்றே ஒன்று தான் தோன்றியது. தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைக்கிறவர்களுக்கும், நமது வளர்ச்சியைத் தடுக்க நினைக்கிறவர்களுக்கும் நான் என்றைக்குமே டேஞ்சர்தான். இதில் கலைஞரை விட ஒரு படி மேலே இருக்கிறேன் என்றால் அது எனக்குப் பெருமைதானே?. ஏனென்றால் இதெல்லாம் நம் தமிழருடைய இரத்தத்திலேயே இருக்கிறது.  என் மேல் நம்பிக்கை வைத்து  நீங்கள் என்னை முதல்வராக ஆக்கி 5 வருடம் ஆனது. இந்த 5 வருடத்தில் மக்களுக்கு என்ன செய்து இருக்கிறீர்கள் என்று யாராவது கேட்டால் நம்மால் மணிக்கணக்காக ஏன் நாள் கணக்காகக் கூட பேச முடியும். முக்கியமாக எப்போதுமே தமிழ்நாட்டை வஞ்சிக்கிற மத்திய அரசை எதிர்த்து தமிழ் மக்களுக்காகச் சண்டை செய்துள்ளதை இன்னும் பெருமையாக என்னால் சொல்லிக்கொள்ள முடியும். சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி என்பது தான் நம்முடைய முதன்மையான குறிக்கோள். அந்த வகையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு உதவித் தொகை, மகளிர் உரிமை தொகை, மகளிர் விடியல் பேருந்து பயணம், தோழி மகளிர் விடுதி, மக்களைத் தேடி மருத்துவமென்று கருவில் இருக்கிற குழந்தையிலிருந்து வயது முதிர்ந்த மூத்த குடிமக்கள் வரை எல்லோரும் பயனடைகிற மாதிரி நிறையத் திட்டங்களைக் கொண்டு வந்தோம்” எனப் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்