Rock Fort Times
Online News

பொன்மலையில் காதல் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தப்பி ஓட்டம்..‌

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 45). பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி(40). இருவேறு மதத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். சதீஷ்குமார் மீது போலீஸ் நிலையத்தில் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் இவர் தனது மனைவி சபுராபீவியை பொன்மலை பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே ரெயில்வேக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நேற்று இரவு அவர்களுக்குள் திடீர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் மனைவி சபுராபீவியை கீழே தள்ளி அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கியுள்ளார்.

பின்னர் அவருடைய தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறிதுநேரத்தில் அந்த பாழடைந்த கட்டிடம் வழியாக சென்றவர்கள் அங்கு சபுராபீவி கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக சதீஷ்குமார் அவரை பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்று கொலை செய்து இருக்கலாம் என முதல்கட்டமாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சதீஷ்குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்