Rock Fort Times
Online News

கடும் பனிப்பொழிவு, சாலையை மறைத்த பனிக்கட்டிகள்: காஷ்மீரில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை தோளில் தூக்கிச் சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்…! (வீடியோ இணைப்பு)

இந்தியாவில் தற்போது கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. அதுவும் காஷ்மீர் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. எங்கு பார்த்தாலும் பனிக்கட்டிகள் நிறைந்து வெள்ளை போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது. காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் கர்னா பகுதி எப்போதும் அடர்ந்த பனி சூழ்ந்து காணப்படும். இங்குள்ள ஜப்தி பிஜல்தார் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிரசவ வலியால் துடித்தார். கடுமையான பனிப்பொழிவால் அந்தப் பகுதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. சாலைகள் பல அடி உயரத்திற்கு பனியால் மூடப்பட்டு இருந்தன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும், எப்படியாவது ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கர்ப்பிணியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் சிறிது தூரம் சென்ற பிறகு நின்று விட்டது. அப்போது அந்த கர்ப்பிணி கடும் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய ராணுவ துணைப் பிரிவு தலைமையகமான டாங்தாரிலிருந்து 104-வது படைப்பிரிவின் வீரர்கள் அங்கு விரைந்தனர்.

அவர்கள் கர்ப்பிணியை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து தோளில் சுமக்க தொடங்கினர். பல கிலோமீட்டர் தூரம் நடந்து பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர். அங்கு தயாராக நின்ற ஒரு ஜே.சி.பி. எந்திரம் மூலம் பனிக்கட்டிகள் அகற்றப்பட்டு பாதை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ராணுவம், காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன், அந்தப் பெண் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த உயிர்காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், போலீசார், ஊழியர்களின் மனிதநேய செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி னர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்