புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சி வைரவன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அந்தோணி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், பள்ளிக்கு சரியாக வராமலும், பள்ளிக்கு வரும் நாட்களில் மதுபாட்டில்களுடன் வந்து மாணவர்கள் முன்னிலையில் மது அருந்தி, தின்பண்டங்கள் சாப்பிட்டு வகுப்பறையிலேயே வாந்தி எடுத்து அதை மாணவர்களும், தலைமை ஆசிரியருக்கு துணைக்கு வரும் நபரும் சுத்தம் செய்துள்ளனர்.இதனால், துர்நாற்றத்தில் மாணவ- மாணவிகள் படித்துள்ளனர். தலைமை ஆசிரியர் அந்தோணியின் இந்த விரும்பத்தகாத செயலால் வெறுப்படைந்த மாணவர்களின் பெற்றோர்கள் வட்டாரக் கல்வி அலுவலரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். இதனால் தற்போது இந்தப் பள்ளியில் 7 பேர் மட்டுமே படித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை. விடுப்பும் எடுக்கவில்லை என்ற நிலையில் மீண்டும் பெற்றோர்கள் புகாரின்பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு.சண்முகம் உத்தரவின்பேரில் பொன்னமராவதி வட்டாரக் கல்வி அலுவலர் ராமதிலகம் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மாணவர்களிடம் விசாரணை செய்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை கொடுத்திருந்தார். இந்த அறிக்கையையடுத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் செந்தில், பள்ளி மாணவர்களுக்கு இடையூறாகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய வைரவன்பட்டி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் தலைமை ஆசிரியருக்கு உடந்தையாகவும், ஆதரவாகவும் செயல்பட்ட வட்டார கல்வி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
Comments are closed.