Rock Fort Times
Online News

விஜய்யை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கிறார்; திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் சென்னை போலீஸ் கமிஷனரை மாற்ற வேண்டும்…- ஆதவ் அர்ஜுனா !

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனித்து களம் காண்கிறது. தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் அறிவித்துவிட்டு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதாலும், கரூர் சம்பவத்தாலும் போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். சென்னை பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், கொளத்தூர் தொகுதியில் சிறிது நேரம் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், பாதுகாப்பு குறைபாடு காரணமாக விருகம்பாக்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யாமல் சென்றார். இந்நிலையில் சென்னை வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் விஜய் இன்று (ஏப்ரல் 6) பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், ஒரு தொகுதியில் இருந்து இன்னொரு தொகுதிக்கு செல்ல ஒரு மணி நேரம் மட்டுமே சென்னை காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நேரம் போதுமானதாக இல்லை என்பதால் இன்றைய விஜய் பிரச்சாரமும ரத்து செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் அண்ணா நகர், வில்லிவாக்கம், தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் இன்று பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தோம். இதற்கான அனுமதி கோரி காவல்துறையினரிடம் கடிதம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நியாயமாக அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், தவெக பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சென்னை காவல் ஆணையர் அருண் மீண்டும் திமுக ஆட்சிதான் வரப்போகிறது என்ற எண்ணத்தில் தேர்தல் ஆணையம், டிஜிபி பேச்சை கேட்காமல் செயல்படுகிறார். மேலும், தவெக தலைவர் விஜய் சென்னையில் பிரச்சாரம் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் செய்ய 12 மணி முதல் 1 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் வில்லிவாக்கத்தில் இருந்து அண்ணா நகர் வழியாக தலைவர் விஜய் வரக்கூடாது என்று காவல் ஆணையர் அருண் தனிப்பட்ட முறையில் மிரட்டல் கொடுக்கிறார். ஒரு கட்சியின் தலைவர் எந்த இடத்தில் எவ்வளவு நேரம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ஒரு காவல் ஆணையர் சொல்வதற்கு அனுமதி கிடையாது. தேர்தல் ஆணையத்தின் சட்ட திட்டத்தை காவல் ஆணையர் அருண் பின்பற்றுவது கிடையாது. எனவே அவரை இடமாற்றம் செய்ய வேண்டும். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 13 தொகுதிகளில் தவெக வெற்றி பெறுவது உறுதி. சென்னையில் திமுக ‘வாஷ் அவுட்’ஆக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்