திருச்சி விமான நிலையத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். நான் போட்டியிட போவதில்லை. ஆதி தமிழ்குடியில் பிறந்த குறவருக்கும், முடி திருத்துவோருக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்குவதில்லை. அதேசமயம் என் இனம் சாராத பலர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தாத்தா, பாட்டி, அப்பா என ஆண்டாண்டு காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல்காந்தி, திடீரென சாதி வாரி கணக்கெடுப்பு கோருவது எதற்காக. திடீரென அவருக்கு தமிழக மீனவர்கள் மீது பாசம் ஏற்படுவது எதற்காக. இத்தனை நாள் ராகுல் காந்தி என்ன கோமாவிலா இருந்தார்?. தேர்தல் வரும் பொழுது மட்டும் அனைவர் மீதும் பாசம் வருகிறது என்றால் அவை அனைத்தும் நாடகம் தான். ஜாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் அதை செய்கிறோம். தனித்தொகுதி என்பது இல்லை என்றால் இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பே இருக்காது.
அரசியல் அதிகாரம், அங்கீகாரம் இல்லாமல் இருப்பவருக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம். நிராகரிக்கப்பட்டவர்களை முன்னேற்றுவது தான் சமூக நீதி.
தமிழ்நாட்டில் வாக்களித்து தேர்ந்தெடுத்த தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார். நான் ஆட்சிக்கு வந்தவுடன், யாராவது முடிந்தால் மீனவர்களை தொட்டுப் பார்க்கட்டும். காங்கிரஸ் கட்சி இனி இருக்காது. அதனால் பாஜகவிற்கு செல்லலாம் என்கிற நினைப்பில் விஜயதாரணி அங்கு சென்று இருக்கலாம். காங்கிரஸ் கட்சியாவது அவருக்கு மூன்று முறை எம்.எல்.ஏ சீட்டு வழங்கியது. ஆனால் பாஜக வை பொறுத்தவரை அக்கட்சியில் சேரும் போது ஏதாவது செய்வார்கள். அதன் பின் எதுவும் செய்ய மாட்டார்கள். வாக்கு இயந்திரத்தை வைத்து தேர்தல் நடக்கும் போது முடிவு மக்கள் கையில் இருக்காது. பாஜகவினர் ஒரு கையில் நோட்டு பெட்டியும், மற்றோரு கையில் வாக்கு பெட்டியும் வைத்துள்ளார்கள். அவர்கள் எத்தனை சீட்டு வெல்வோம் என கூறுகிறார்களோ? அத்தனையும் வெல்வார்கள். கூட்டணி குறித்து ரகசியமாக வைத்திருப்பேன். அதை வெளிப்படையாக கூறுவது மாண்பாக இருக்காது.
வாக்கு இயந்திரத்தை நமக்கு தயாரித்து தருவது ஜப்பான். ஆனால், அந்த நாடு தேர்தலில் அதனை பயன்படுத்துவதில்லை. நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளின் தோடு, மூக்குத்தி உள்ளிட்டவற்றில் விடைகளை மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முடியும் என கூறுகிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய வாக்கு இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது என அவர்களே தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கும் போது நிச்சயமாக எங்கள் கட்சி போட்டியிடும். மக்கள் பணம் விரையமாவதை தடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டவர் மரணம் அடைவது, தகுதி நீக்கம் செய்யப்படுவது உள்ளிட்ட சமயங்களில், இடைத்தேர்தல் நடத்துவதை கைவிட வேண்டும். பொது தேர்தலில் இரண்டாவது இடம் பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.