திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர், இன்று(30-01-2024) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான சே.நீலகண்டன், கோ.நாகராஜன், கா.உதுமான்அலி, மா.குமாரவேல், முனைவர் கா.பால்பாண்டி ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக பங்கேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அ.பாபு போராட்டத்தில் பங்கேற்றவர்களை வரவேற்று பேசினார். தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பொ.அன்பரசன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஆ.பெரியசாமி போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேச, மாவட்ட நிதி காப்பாளர் சி.ஆரோக்கியராஜ் நன்றி கூறினார். இந்தப் போராட்டத்தில் 01.04.2023 க்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும். முதுநிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறையில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.
சிறப்பு கால ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர்கள், ஊர் புற நூலகர், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியம், தினக்கூலியில் பணியாற்றி வரும் எம்.ஆர்.பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 30% மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி வரன்முறை படுத்த வேண்டும். தனியார்மய அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். அரசு துறையில் அவுட்சோர்சிங் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. முதலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதாக 50 பெண்கள் உட்பட 250 பேரை
போலீசார் கைது செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.