திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ( 07.01.2024 ) காலை தொடங்கிய மழை, நள்ளிரவை கடந்து தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது வீட்டின் சுவர் கனமழை காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த ராஜசேகரின் மகன் மோகன் தாஸ் (11) மற்றும் மோனிஷா (9) இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தனது மகன் மற்றும் மகள் மீது சுவர் இடிந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜசேகர், உடனடியாக அவர்களை மீட்டு, தனது இருசக்கர வாகனம் மூலம் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றார். தலையில் பலத்த காயம் அடைந்த சிறுமி மோனிஷா, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நன்னிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சுவர் இடிந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.