விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மாநகரில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றன. அந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று((09-09-2024) மாலை சுமார் 3 மணி அளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. திருச்சி மாநகரை பொருத்தவரை திருச்சி காவிரி ஆற்றில் பெரும்பாலான விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி மாநகர பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி மாநகரில் நடைபெற உள்ள விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வின்போது விழா அமைப்பாளர்கள், தமிழ்நாடு அரசு மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து விநாயகர் சிலை ஊர்வலத்தினை அமைதியான முறையில் நடத்திட வேண்டும். ஊர்வலத்தின்போது பிற மத வழிபாட்டு தலங்களின் அருகே கோஷங்கள் எழுப்புவதோ, பட்டாசுகள் வெடிப்பதோ கூடாது. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஊர்வலம் செல்ல வேண்டும் என்று காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.திருச்சி மாநகரத்தில் இன்று மாலை நடைபெற உள்ள விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் 3 காவல் துணை ஆணையர்கள், 1 கூடுதல் காவல் துணை ஆணையர், 8 காவல் உதவி ஆணையர்கள், 41 காவல் ஆய்வாளர்கள், 101 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், காவிரி ஆற்றில் விநாயகரை பாதுகாப்பாக கரைப்பதற்காக பாலத்தின் மேல் பகுதியில் தடுப்பு கட்டைகள், மேடைகள், மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

Comments are closed.