மந்திரி-மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத விரக்தி!* கட்சி நிர்வாகியிடம் கொச்சையாக பேசும் திருவெறும்பூர் எம்.எல்.ஏ. விஜி! (ஆடியோ,வீடியோ இணைப்பு)
தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் லஞ்சம், ஊழல் இல்லாத நல்லாட்சி தர வேண்டும் என்கிற முனைப்போடு செயல்பட்டு வருகிறார் தமிழக முதல்வர் விஜய். தான் தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் நிகழ்வில் கூட, மக்கள் நலனே நமது குறிக்கோள். ஆளுங்கட்சி தானே என த.வெ.க தொண்டர்கள் யாரும் அதிகாரத்தில் ஈடுபட வேண்டாம். யாருடைய பவர் சென்டரும் தமிழக வெற்றிக்கழகத்தில் கிடையாது. எனது நேரடி தலைமையின் கீழ் கட்சி செயல்படும் என பேசி ஆரம்பத்திலேயே கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால், கட்சித்தலைவரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட திருச்சி, திருவெறும்பூர் எம்.எல்.ஏ.வான நவல்பட்டு விஜி, தனது சொந்த கட்சியை சேர்ந்த எஸ்.ஆர்.சபரி என்பவரை வாடா…போடா.. என வசைபாடுவதும், கேட்கவே காது கூசும் அளவுக்கு கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் ஆடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி திருச்சி மாவட்ட த.வெ.கவில் அனலை கிளப்பியுள்ளது.
திருவெறும்பூர் தொகுதி த.வெ.கவில் என்ன நடந்தது? என விரிவாக விசாரித்தோம். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது., திருவெறும்பூர் தொகுதியில் நவல்பட்டு விஜி எம்.எல்.ஏவாக எப்போது வெற்றி பெற்றாரோ அப்போதே இவரது ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. சாதாரண கறிக்கடை நடத்தி வந்தவருக்கு, தலைவர் விஜய் மூலம் தான் அரசியல் வெளிச்சம் கிடைத்தது. விஜய் என்கிற தனி ஒருவரின் இமேஜ் கரணமாகதான் இவர் விசில் சின்னத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.ஆனால், அதையெல்லாம் மறந்த விஜி, தனது சொந்த செல்வாக்கு காரணமாகதான் நான் எம்.எல்.ஏ ஆனேன்.கட்சியில் யாரும் எனக்கு ஆள் கிடையாது. அடுத்த ஐந்து வருடத்திற்கு திருவெறும்பூரில் நான் வைத்தது தான் சட்டம் என ஆட்டம் போட்டு வருகிறார். திமுக – அதிமுகவிற்கு மாற்றாக மக்களுக்கான அரசியல் கட்சியாக த.வெ.க இருக்கும் என்று இயங்கிவரும் எங்களுக்கு எம்.எல்.ஏ நவல்பட்டு விஜியின் செயல்பாடு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனாலும் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட விரும்புகிறோம். எங்களின் ஒற்றுமைக்கு நவல்பட்டு விஜி தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறார். தற்போது திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் அருள் விஜயை கண்டாலே இவருக்கு எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது. அரசியலில் அவனெல்லாம் ஒரு ஆளா? நான் தான் மாவட்ட செயலாளராக வரப்போகிறேன். திருவெறும்பூர் தொகுதி த.வெ.கவினர் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என எங்களை மிரட்டுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவெறும்பூர் தனியார் மண்டபத்தில் முதல்வர் விஜயின் பிறந்தநாள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில்,எம்.எல்.ஏ நவல்பட்டு விஜியின் செயல்பாடுகள் குறித்து த.வெ.க தொண்டரான எஸ்.ஆர்.சபரி என்பவர் மறைமுகமாக விமர்சித்து பேசினார்.
நமக்குள் எந்த. வேறுபாடும் வேண்டாம் நாம் அனைவரும் கட்சித்தலைமை விருப்பப்படியும், மாவட்ட செயலாளருக்கு ஆதரவாகவும் கட்சி வேலை பார்ப்போம் என மேடையில் பேசினார். இந்த விவகாரம் நவல்பட்டு விஜியின் காதுகளுக்கு செல்ல, உடனடியாக தனது உறவினரின் செல்போனிலிருந்து சபரியை தொடர்பு கொண்ட விஜி, வாடா.. போடா.. எனவும் அருவருக்கத்தக்க வகையிலும் ஆபாசமாக சபரியை திட்டி தீர்த்துவிட்டார். இதற்கு முன்பு எத்தனையோ பேர் திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்துள்ளனர். யாரும் தனது சொந்த கட்சி தொண்டர்களை இப்படி தரம் தாழ்ந்து பேசியதில்லை. தனக்கு கீழ்தான் திருச்சி மாவட்ட த.வெ.க இருக்க வேண்டும், தான் சொல்வதைத்தான் கட்சி தொண்டர்கள் செய்ய வேண்டும் என்கிற ஆதிக்க மனப்பான்மையில் அனைவரையும் மரியாதை இல்லாமல் நடத்தும் நவல்பட்டு விஜியின் திமிரை கட்சித்தலைவரான தமிழக முதல்வர் விஜய் தான் அடக்க வேண்டும். இல்லையென்றால் மாற்று அரசியலைத் தேடி தமிழக வெற்றிக்கழகத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நோக்கமே கேள்விக்குறியாகிவிடும் என்றனர்.

Comments are closed.